Tamilnadu

தி.மு.க தலைவரை சந்தித்த விவசாய சங்க தலைவரை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை - பழிவாங்கும் அதிமுக அரசு!

தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் போக்கை மேற்கொள்வது வாடிக்கையாகவிட்டது. கடந்த காலங்களில் அரசின் மோசமான திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்களை கைது செய்து, அவர்கள் மீது பொய்யான வழக்கைப் பதிவு செய்து சிறையில் அடைத்த அ.தி.மு.க அரசு தற்போது, ஒருபடி மேலே சென்று அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுபவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அந்தவகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவசாய சங்க தலைவர் காவல்துறையினரைக் கொண்டு அடித்து இழுத்துச் சென்று பழிவாங்கியுள்ளது எடப்பாடி அரசு. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரச்சார பயணத்தின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

தி.மு.க தலைவரின் இத்தகைய அறிவிப்பால் திகைத்துப் போன அ.தி.மு.க அரசு தேர்தல் தோல்வி பயம் காரணமாக தி.மு.க தலைவர் சொல்லும் வாக்குறுதிகளை தற்போதே நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கடந்த 10ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் தமிழகத்தில் உள்ள முக்கிய விவசாய சங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அரசின் பயிர்க்கடன் ரத்து செய்யும் நடவடிக்கைக்கு அச்சாணியாக உங்கள் அறிவிப்பே இருந்தது என தி.மு.க தலைவரை சந்தித்து நன்றி கூறினார்கள்.

அந்தச் சந்திப்பில் மக்கள் மற்றும் காவிரி டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கலந்துகொண்டு தங்களது அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த நிகழ்வு நடந்து முடிந்த இரண்டு நாட்களிலேயே, மக்கள் அனுமதியில்லாமல் காட்டுமன்னார்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சாலையோர வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டபோது, இளங்கீரன் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுப்படனர். மேலும் பொக்லைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் கால அவகாசம் தர முடியாது எனக் கூறி அதிகாரிகள் வீடுகளைத் தொடர்ந்து இடித்துக் கொண்டிருந்தனர். இதனால், போலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருந்த இளங்கீரனை மட்டும் போலிஸார் குறி வைத்து தாக்கியுள்ளனர். மேலும் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜா இளங்கீரனின் சட்டையை பிடித்து இழுத்துச் சென்று கைது செய்துள்ளார்.

விவசாய சங்கத் தலைவரை பொதுவெளியில் போலிஸார் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கும் இளங்கீரனுக்கும் ஆகவே ஆகாது. இளங்கீரன் அரசின் திட்டங்களை எதிர்த்து அடிக்கடி போராடுவதால் போலிஸார் இளங்கீரனை விரோதியாகத்தான் பார்ப்பார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இளங்கீரன் தி.மு.க தலைவரை சந்தித்ததால் ஆளும் கட்சிக்கும் இவர் மீது வெறுப்பு இருந்தது. மக்களின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இளங்கீரன் அன்றைய தினம் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமைத் தாங்கினார்.

போராட்டம் சுமூகமாகச் சென்றபோது போலிஸாரே தள்ளுமுள்ளு செய்தனர். அதுமட்டுமல்லாது, அமைதியான முறையில் போராடிய இளங்கீரனை போலிஸ் அடித்தது கூடியிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

போலிஸார் ஏன் காட்டுமிராண்டிகள் போல நடந்துகொண்டு, அமைதியாகப் போராடிய அவரது சட்டையை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் அவரின் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர். போலிஸார் இவ்வளவு கொடுமைப்படுத்துவதற்குப் பின்னணியில் ஆளும் கட்சியின் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தல் இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளங்கீரன் மீது நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “எத்தனை உயிர்கள் பலியானாலும் அலட்சியமாகவே இருப்பதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!