தமிழ்நாடு

“எத்தனை உயிர்கள் பலியானாலும் அலட்சியமாகவே இருப்பதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

உயிரிழந்தவர்களுக்கு போதிய நிவாரண உதவியை வழங்கிட வேண்டும் எனவும், படுகாயமடைந்துள்ள அனைவரையும் உயர்தர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிட வேண்டும் எனவும் அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

“எத்தனை உயிர்கள் பலியானாலும் அலட்சியமாகவே இருப்பதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு போதிய நிவாரண உதவியை வழங்கிட வேண்டும் எனவும், படுகாயமடைந்துள்ள அனைவரையும் உரிய - உயர்தர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிட வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (12-02-2021), தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், “சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகியிருப்பது பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் என்பது அ.தி.மு.க ஆட்சியில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு முன் பல முறை இதுபோன்ற வெடி விபத்துக்கள் நிகழ்ந்து - உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது.

"எத்தனை உயிர்கள் பலியானாலும் நாங்கள் அலட்சியமாகவே இருப்போம்" என்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு செயல்படுவது முற்றிலும் மனித நேயமற்றது. மக்களுக்கு மாபாதகம் செய்யும் மனப்பான்மை கொண்டது.

எனவே, பட்டாசு தொழிற்சாலைகளில் அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும் என்று அ.தி.மு.க அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களுக்கு போதிய நிவாரண உதவியை வழங்கிட வேண்டும் எனவும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் உரிய - உயர்தர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories