Tamilnadu

“விவசாயக் கடன் ரத்து : தி.மு.க தலைவர் சொன்ன பிறகு செயல்படும் அ.தி.மு.க அரசு” - உதயநிதி ஸ்டாலின் சாடல்!

“தி.மு.க தலைவர் சொன்ன பிறகுதான் அரசு விழித்துக் கொண்டு செயல்படுகிறது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது” என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவரும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியசெவலை, எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க ஆட்சியின்போது மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி முதல்வர் அக்கறை கொள்ளவில்லை.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் மீது வெறுப்பு உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டியதன் எதிரொலியாக தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்களைச் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் சார்ந்த பிரச்சினை குறித்து முதலில் குரல் கொடுத்தபின்னர், அதை உடனே செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். உடனே செய்துவிட்டால் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பெயர் கிடைத்துவிடுமோ என எண்ணி, காலம் தாழ்த்தி, தற்போது தேர்தல் நேரத்தில் ரூ.2,500 வழங்கியுள்ளனர்.

அதேபோன்று, மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி அரசு உடனடியாகச் செய்யாமல், காலம் தாழ்த்தி தேர்வை ரத்து செய்தது. அதேபோன்றுதான் தற்போதும் செய்துள்ளனர்.

விவசாயிகள் மாளாத் துயரில் இருப்பதால், அவர்களது கடனை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் வலியுறுத்தி வந்த நிலையில், அரசு தள்ளுபடி செய்யாததால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க அரசு தற்போது அரசு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் தி.மு.க தலைவர் சொன்ன பிறகுதான் அரசு விழித்துக் கொண்டு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது” எனத் தெரிவித்தார்.

Also Read: விவசாய கடன்களை ரத்து செய்யாமல் நீதிமன்றம் சென்ற எடப்பாடி அரசையே அறிவிப்பு வெளியிடச் செய்த தி.மு.க தலைவர்!