Tamilnadu

“அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் புறக்கணிக்கும் அ.தி.மு.க” - கார்த்திக் MLA கண்டனம்!

அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சர்வாதிகார, அராஜக போக்கைக் கண்டித்து மக்கள் சபையில் தி.மு.க தக்க பாடம் கற்பிக்கும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 37 வது வார்டு பகுதியில் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நாளை (பிப்ரவரி 6) காலை நடைபெற உள்ளது, மக்களின் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் இந்த அரசு விழாக்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு அழைப்பிதழும் அனுப்பாமல் இந்த அரசு விழா நடத்தப்படுகிறது.

மக்களின் வரிப் பணத்தில் அ.தி.மு.க விளம்பரம் செய்து வருகிறது. ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் அரசு விழாவினை அ.தி.மு.க விழாவை போல நடத்துகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிப்பது அந்த தேர்ந்தெடுத்த மக்களையே புறக்கணிப்பது போலாகும்.

இந்த 37 வது வட்டத்திற்குட்பட்ட சாலைகள் உள்ளிட்ட சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது என்றும், அதை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கி இருக்கின்றேன். பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளேன். ஆனால் இதுவரை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல சாலைகளை சீரமைக்க இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது அரசியல் விளம்பரத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவும் கடந்த பத்து ஆண்டுகளாக மக்களைப் பற்றி கவலைப்படாமல், அ.தி.மு.க ஆட்சி முடியும் அந்திமத் தருவாயில் இது போன்ற பணிகளை துவக்கி, மிக கேவலமான முறையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.

ஏற்கனவே கடந்த 20.11.2019 அன்று, வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநாகராட்சி பள்ளியில் நடந்த குறைதீர்ப்பு கூட்டம் நிகழ்ச்சிக்கு, சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான எனக்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை. எனது தொகுதியில் நடக்கும் அரசு விழாவுக்கு மக்கள் பிரதிநிதியான தன்னை எப்படி அழைக்காமல் இருக்கலாம் என்று கேள்வி கேட்டதற்கு, அமைச்சரின் உத்தரவின் பேரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன்பாகவே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அராஜகம் செய்தனர்.

இது குறித்து மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை என்ன? என்றும், சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு தி.மு.க தக்க பாடம் கற்பிக்கும் என்றும் தனது கண்டனத்தில் தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகளை தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகமும், உயர் அதிகாரிகளும் இது போன்ற அரசு விழாக்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது தொடர்கதையாக உள்ளது. சிறிது கூட அரசியல் அடிப்படை நாகரீகம் இல்லாமல், அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

Also Read: “அ.தி.மு.க ஆட்சி முடியப்போவதை நம்மை விட அ.தி.மு.கவினர் அதிகம் உணர்ந்துவிட்டார்கள்”: மு.க.ஸ்டாலின் பேச்சு!