Tamilnadu
“17 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் : விஜயபாஸ்கர் மீது பகீர் குற்றச்சாட்டு” - யார் இந்த ஷர்மிளா?
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும் எனக்கும் பல வருடங்கள் நட்பு உள்ளது. கூவத்தூர் சம்பவத்தின் போது அவர் சொன்ன தொகைக்கு தங்கக்கட்டிகளை மாற்றிக் கொடுத்தேன். ஆனால், எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்து வருகிறார்.’’ - கடந்த சில மாதங்களாகவே இப்படியொரு`பகீர்’ குற்றச்சாட்டை அடிக்கடி கிளப்புகிறார் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா. இந்த நிலையில் தான், கரூர் மாவட்ட காவல்துறையில் ஷர்மிளா மீது மோசடி புகார் ஒன்று பதிவாகி, பரபரப்பை எகிற வைத்திருக்கிறது!
கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளாவும், அவரின் கணவர் ராஜீவும் தொழிலதிபர்கள். கடந்த 2020, ஜூலை மாதம் ஷர்மிளா பேசிய வீடியோவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிட்டு, ‘‘ஹைகமாண்ட் பெயரைச் சொல்லி அவர் முடித்துக் கொண்ட காரியங்கள் பற்றி எனக்குத் தெரியும்.
அவர் எவ்வளவு கீழ்த்தரமான மனிதர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்று வெடித்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் அந்த வீடியோ அனலைக் கிளப்பிய நிலையில், சில வாரங்களிலேயே மற்றொரு வீடியோ வெளியானது. அதில் ஷர்மிளா, ‘‘விஜயபாஸ்கரும் நானும் நண்பர்கள். மருத்துவச் சிகிச்சைக்காக அவர் பலமுறை என் தரப்புக்கு உதவியிருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.
இந்தச் சூழலில்தான், சென்னை அயன்புரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். 2020, அக்டோபர் 15-ம் தேதி பதியப்பட்டுள்ள அந்தப்புகாரில், ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் 25 லட்சம் ரூபாயை ஷர்மிளாகுமாரியும் அவர் கணவர் ராஜீவும் மோசடி செய்துவிட்டனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு மேற்கண்ட புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரில், ஆஜராகும்படி ஷர்மிளாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது காவல்துறை. ஆனால், “இந்தப் புகாரே விஜயபாஸ்கரின் திட்டமிட்ட நாடகம். தேர்தல் நேரத்தில் நான் வாய் திறந்தால், அவருக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், என்னை முடக்குவதற்கு இப்படி பொய்ப் புகாரைப் பதிவுசெய்ய வைத்திருக்கிறார். என்மீது புகார் அளித்திருக்கும் நபரை நான் சந்தித்ததே இல்லை” எனக் குற்றம்சாட்டியுள்ளார் ஷர்மிளா.
மேலும், ‘‘அவரை மிரட்டி பணம் பறிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. 2017, பிப்ரவரியில் என்னைத் தொடர்புகொண்ட விஜயபாஸ்கர், ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, ‘ஹை கமாண்ட் பணம் இது,
இந்தப் பணத்துக்கு தங்கக்கட்டிகளை மாற்றித்தாருங்கள்’ என்றார். அவரை நம்பி தங்கக்கட்டிகளாக மாற்றிக் கொடுத்தேன். நான் கொடுத்த அந்தத் தங்கம்தான் கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சொல்லி என்னிடம் பலகாரியங்களை அவர் சாதித்துக்கொண்டார். 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விஜயபாஸ்கரிடம் கொடுத்தேன். அதற்கான வங்கிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் எல்லாமே என்னிடம் இருக்கின்றன. இன்றுவரை அதற்கான பணம் எனக்கு வரவில்லை. அதற்காகத்தான் போராடுகிறேன்.
சேலத்திலிருக்கும் மருத்துவர் ஒருவர் என்னைச் சந்தித்து, ‘அமைச்சர் உங்களுக்கு விரைவில் செட்டில் செய்துவிடுவார்’ என்று சொல்லி, விஜயபாஸ்கருக்கும் எனக்கும் நட்புரீதியாக மட்டுமே தொடர்பு இருப்பதாக என்னைக் கட்டாயப்படுத்திப் பேசவைத்து, வீடியோவும் எடுத்துக் கொண்டார். அதை வைத்துத்தான் எங்களுக்கு இடையே செட்டில்மென்ட் முடிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். எனக்கு என் பணம் வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி : ஜூனியர் விகடன்
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!