Tamilnadu

“முகமது நபி பற்றி அவதூறு பேச்சு - தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சி”: பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமன், நபிகள் நாயகத்தை பற்றியும், அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நபிகள் நாயகத்தை பற்றி பேசிய கல்யாணராமனை உடனடியாக கைது செய்திட வேண்டும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, சேலத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரம் டி.எம்.எஸ் என்ற பகுதியில் சேலம் ஆத்தூர் பிரதான சாலையில் எஸ்.டி.பி கட்சியினர், மறியலில் ஈடுபட்டு கல்யாணராமனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே போன்று சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் அரபிக்கல்லூரி அருகே ஒன்று திரண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், மறியலில் ஈடுபட்டு கல்யாணராமனை உடனடியாக கைது செய்திட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முகமது நபி குறித்து அவதூறு பேசிய வழக்கில், பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குபதிவு செய்து அவினாசி சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read: லேசா மிரட்டினாலே, முஸ்லிம்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுவாங்க - இதுவே மோடியின் சாதனை : பா.ஜ.க பிரமுகர் ட்வீட்