Tamilnadu

“செவிலியர்கள் கேட்பது பிச்சையல்ல; அவர்களது உரிமை..” பணி நிர்ந்தரம் செய்யாத அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்!

மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் தாய்க்கு நிகரான பரிவுடனும், மனிதநேயத்துடனும் மகத்தான சேவையாற்றி வருபவர்கள் செவிலியர்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமலும், தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்காமலும் மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை ஈடுபத்திக் கொண்டவர்கள் செவிலியர்கள்.

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், படிகள் வழங்க வேண்டும். கொரோனாவால் இறந்த செவிலியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் பதினான்காயிரம் செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதுமான மருத்துவர்கள், செவலியர்கள் மருத்துவ உதவியாளர்களை நியமித்து மக்களைப் பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் கடமை. உலக நல்வாழ்வு நிறுவனம் (WHO) மற்றும் இந்திய செவிலியர் ஆணையம் (INC) வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், சாதாரண ஐந்து நோயளிகளுக்கு ஒரு செவிலியர் என்று நியமிக்கப்பட வேண்டும்.

செவிலியர்களின் நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் காரணமாக 2015ம் ஆண்டு தமிழக அரசு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களைத் தேர்வு செய்து, செவிலிய காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் (MRB) உருவாக்கி, 7,700 செவிலியர் பணிகளுக்கு தேர்வு நடத்தியது. 45,000 பேர் பங்கேற்று, 19,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Also Read: “அரசு ஊழியர்களை அழைத்து பேசாத முதலமைச்சர்.. பிரதமரை போல் பிடிவாதம் பிடிக்கும் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின்

இவர்களுள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 7,700 பேருக்கு பணி ஆணை வழங்கி, நாள் ஒன்றுக்கு 256 ரூபாய் குறைந்த அளவு ஊதியம், 2 ஆண்டுகள் கழித்து பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதற்குப் பின் 3,300 செவிலியர்களைப் பணியில் அமர்த்தி 11,000 பேராக ஆன நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும், பணி கால நேரமும் வரையறுக்கப்படாமல் செவிலியர்கள் ஏமாற்றப்பட்டதாக 2017 ஆம் ஆண்டு சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா பேரிடர் காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள். அவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர் கேட்பது பிச்சை அல்ல அவர்களின் உரிமை. செவிலியர்களுகடைய பிரச்சினையைக் கனிவோடு பரிசிலனை செய்து தீர்வு காண வேண்டும்.

பெருகி வரும் விலைவாசி உயர்வு, குடும்பத்தில் வறுமை என்று பெரும்பான்மையான செவிலியர்கள் பாதி வயது கடந்தவர்களாக வாழ்வோடு போராடி கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வை முறையாக வழங்க ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

Also Read: “விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உழவன் மகன் என நடிக்கக்கூடாது” - வைகோ கடும் விமர்சனம்!