Tamilnadu

“சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்” : அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம் !

தமிழக அரசு மருத்துவமணையில் பணி புரியும் செவிலியர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

மேலும், மற்றும் கொரோனா பெரும் தொற்று காலத்தில் தன் இன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் கொரோனாவால் இறந்த செவிலியர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர்கள், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் கருப்பு பட்டை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஒரு கட்டமாக சென்னை மெரினா அருகே உள்ள உழைப்பாளர் சிலை முன் சுமார் 1000க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் வழங்கி உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தடையை மீறி செவிலியர்கள் உழைப்பாளர் சிலை முன் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தனர். இருப்பினும் தங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மெரினாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “திமுக சாதனைகளை மறைத்து டாக்டர் ராமதாஸ் தனது சுயநலத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்”: மு.க.ஸ்டாலின்