Tamilnadu
“மதுரை எய்ம்ஸ்: நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமியுங்கள்” - சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை!
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக இன்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்துள்ளார் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் எதுவுமே நடைபெறாமல் உள்ளது. இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது.
இதுதொடர்பாக இன்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் இணைச்செயலாளர் (எய்ம்ஸ்) நிலம்பூஜ் சரண் இருவரையும் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை வைத்தேன்.
1. மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தரவுகளை வைத்து தெரியவந்துள்ளது, இதற்கென தேவைப்படும் "நிர்வாக அனுமதியை" (administrative sanction) உடனடியாக வழங்கவேண்டும்.
2. இதற்கென கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை விரைவாக கையெழுத்திட்டு செயல்படுத்தி வேலைகளை துரிதப்படுத்துவது.
3. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிர்வாக இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், துணை இயக்குனர் (நிர்வாகம்), மற்றும் நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமித்து, இத்திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுபடுத்த வேண்டும். ஆகிய மூன்று கோரிக்கைகளை வைத்தேன்.
1,200 கோடியிலிருந்து 2,000 கோடியாக உயர்வதற்கான காரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனை புதிதாக இணைப்பதால் திட்டமிடப்பட்ட செலவுத்தொகையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது” என்றனர். இதற்கான நிர்வாக அனுமதி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டிய நிலையுள்ளதால் விரைவாக அமைச்சரவை ஒப்புதல் பெற்று முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
அதே போல ஜப்பான் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் இன்னும் ஏன் காலம் தாழ்த்தப்படுகிறது ? அதற்கான தேதியை வரையறுங்கள் என்று கேட்டதற்கு மார்ச் இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளனர். இதன் தொடர்சியாக நிர்வாகத்துக்கு தேவையான அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளனர்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!