Tamilnadu
நீட் முறைகேடு: 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மாணவி பெங்களூருவில் பிடிபட்டார்!
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் நீட் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தனது தந்தை பாலச்சந்திரனுடன் அந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற மாணவி 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி என்று தெரிய வந்ததும் அது தொடர்பாக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் மாணவி மற்றும் அவரது தந்தை பல் மருத்துவர் பாலச்சந்தர் ஆகியோர் மீது 419- ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 420- மோசடி, 464- தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465- பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், 468- ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், 471- பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என கூறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தீக்சாவின் தந்தை மருத்துவர் பாலச்சந்திரனை தனிப்படை போலீசார் கடந்த 1ம் தேதியன்று கைது செய்தனர். ரூ. 20 ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழை அவருக்கு சிலர் தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. மேலும் பாலச்சந்திரனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர். போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய புரோக்கர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து மாணவி போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் அவர் பெங்களூருவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வரவே அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
சென்னை கொண்டு வந்து பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு பெரியமேடு போலீசார் எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-எம்.எம் மேஜிஸ்ட்ரேட் சந்தோஷ் முன்னிலையில் மாணவியை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் பிப்ரவரி 1 ம் தேதி வரை மாணவியை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!