Tamilnadu

“தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு” : தூத்துக்குடியில் நடந்த கொடூரம் !

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி. இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி 2019 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் உள்ள புஷ்பா நகர் என்ற பகுதியை சேர்ந்த திபாகர் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், துர்கா தேவி கர்ப்பமாக இருந்தார்.

அவருக்கு பிரையண்ட் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தை தலைகீழாக இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருந்துள்ளனர். துர்கா தேவியின் கணவர் திபாகர் மற்றும் உறவினர்களுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்பொழுது, துர்கா தேவி தனது குறுக்கு பகுதியில் வலிப்பதாக கூறியதை தொடர்ந்து, கணவர் திபாகர் மருத்துவமனை செவிலியர்களுடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, செவிலியர் துர்கா தேவிக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்து உள்ளார். சற்று நேரத்தில், அவருக்கு உடல் ழுவதும் வீக்கம் ஏற்பட்டு வலிப்பு வந்துள்ளது.

இதனைக் கண்ட மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி உறவினர்களும் கூறியுள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் துர்காதேவி அழைத்துச்செல்ல வந்துள்ளது. ஆனால், ஆம்புலன்சில் உள்ள மருத்துவர்கள் துர்கா தேவியை பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், தனியார் மருத்துவமனை மருத்துவர் யார் யாரிடமெல்லாமோ பேசி, துர்காதேவியை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து துர்கா தேவியின் உறவினர்கள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில், தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கோட்டாட்சியர் சிம்ரன் ஜித் கலோன் நேரில் விசாரணை செய்தார்.

மேலும், துர்கா தேவியின் உறவினர்களின் புகார் அடிப்படையில், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Also Read: அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் நிதி: ஜோ பைடன் அறிவிப்பு.. ரூ.20 லட்சம் கோடி திட்டம் என்னவானது Mr.மோடி?