Tamilnadu

தமிழகம் முழுவதும் களைகட்டும் சமத்துவ பொங்கல் விழா : கிராமங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. . உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகத்துடனும், மண்ணின் மணத்துடனும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

அதன்படி, தை திங்கள் முதல் நாளான இன்றைய தினத்தை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் அதிகாலை முதலே கொண்டாட தொடங்கினர்.

குறிப்பாக, அதிகாலை சூரியனை கும்பிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். அதேப்போல், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர்.

அதன் ஒருபகுதியாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மீனவ கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டு நான்கு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

இன்று அதிகாலை அனைவரும் புத்தாடை அணிந்து அங்குள்ள தேவாலயம் முன் கூடி 54 பானைகளில் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். உழவர் திருநாளை கொண்டாடும் இந்நாளில், விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. 54 வது ஆண்டாக பொங்கல் விழாவை கொண்டாடும் மீனவ மக்கள் மூன்று நாட்கள் பெண்களுக்கான கபடி போட்டி, ஆண்களுக்கான கபடி போட்டி, வழுக்குமரம் ஏறுதல் போட்டி, கடலில் நீச்சல் போட்டி,கட்டுமர போட்டி போன்ற பாரம்பரிய போட்டிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Also Read: 46 மென்பொருட்களை பயன்படுத்தி தகவல் திருட்டு - சீன கடன் செயலிகளின் பயங்கர திட்டம் - ‘ரா’ அமைப்பு விசாரணை!