கோப்புப்படம்
Tamilnadu

சென்னையிலும் ஒரு ஸ்டெர்லைட்.. துத்தநாகம் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வடசென்னை மக்கள் கோரிக்கை!

நச்சுப்புகை, மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் வகையில் புகை வெளியிடும் சென்னை துத்தநாகம் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைநகர் சென்னை மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் தலைநகர் சென்னை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

சென்னை வியாசார்பாடியில் கடந்த 30 ஆண்டுகளாக இரும்புகளுக்கு முலாம் பூசும் துத்தநாகம் கம்பெனி செயல்பட்டு வருவதாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் இந்த கம்பெனியில் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது முதல் அத்தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சு புகை, வியாசர்பாடி சர்மா நகர், புதுநகர் சாலை, மாநகர் சாஸ்திரி நகர், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல், குமட்டல் வாந்தி போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும், தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முறையாக நீதிமன்றத்தை நாடவும் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் செயல்படும் துத்தநாக இரும்புக்கு முலாம் பூசும் துத்தநாகம் தொழிற்சாலை தூத்துக்குடியை போல் சென்னையின் ஸ்டெர்லைட் ஆலை இந்த கம்பெனி எனவும் தெரிவித்தனர்.

Also Read: வேளச்சேரி-ஆலந்தூர் பறக்கும் ரயில் திட்டம்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட அதிமுக -T.R.பாலு குற்றச்சாட்டு!