Tamilnadu

“பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகளின் முன்பு அ.தி.மு.க பேனர்கள் வைக்கக்கூடாது” : ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்களில் முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம்பெறுவதற்குத் தடை கோரி தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டோக்கன்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்களை அச்சிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொடர்பாக ஆளுங்கட்சியினர், ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்துள்ளதாக கூறி, தி.மு.க தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு சின்னம் பதித்து 39,000 ரேஷன் கடைகளின் முன் அ.தி.மு.கவினர் அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அனுமதியின்றி பேனர்கள் வைக்கமாட்டோம் என ஆளுங்கட்சி உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததையும் சுட்டிக்காட்டினார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ரேஷன் கடை அருகில் அ.தி.மு.கவினர் விளம்பரம், பேனர் இருக்கக்கூடாது என்றும், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றவேண்டும் என உத்தரவிட்டனர்.

அதேபோல, ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்றவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read: “மக்களை நாங்க அழகுபடுத்துறோம், ஆனா சாதி எங்களை அழிக்குது”: கரூர் ஆணவ படுகொலை - நடந்தது என்ன?