Tamilnadu

மதுரை AIIMS திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்வு.. கொள்ளையடிக்க திட்டமிடுகிறதா மத்திய மாநில அரசுகள்?

2015ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து நான்கு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில், இதுகாறும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் என எதனையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,264 கோடி மதிப்பில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகியும் ஒரு செங்கலை கூட வைக்காத நிலையில், தற்போது மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு இரண்டாயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ஜிக்கா எனும் ஜப்பான் நாட்டு நிறுவனத்துடனான கடன் ஒப்பந்த தாமதமாகி வந்த நிலையில் திட்டமதிப்பீடு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா ஆர்.டி.ஐ. மூலம் எய்ம்ஸ் நிலம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு இரண்டாயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அதற்கான 85 சதவிகித கடனை ஜப்பான் நாட்டு ஜிக்கா நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தன் வருகிற மார்ச் மாதம் கையெழுத்தாகும் என தெரிவித்துள்ள மத்திய அரசு எஞ்சியுள்ள 15 சதவிகித நிதி எப்படி பெறப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மேலும், எய்ம்ஸ் கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு கல்லூரி வகுப்புகளுக்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டப்படுவதற்கு 4 ஆண்டுகள் மற்றும் நிதி பெறுவதற்கு 2 ஆண்டுகள் என தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் எய்ம்ஸ் விவகாரத்தில் இழுத்தடிப்பு செய்வது கொள்ளையடிப்பதற்கான பேரம் நடைபெறுகிறதா என அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்களிடையே ஐயப்பாடு எழுந்துள்ளது.

Also Read: மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதில் தொடரும் தாமதம்.. பேரம் நடக்கிறதா? இதுதான் எடப்பாடியின் நிர்வாக திறமையா?