Tamilnadu
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்!
கொல்கத்தா உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது.
ஏ.பி.சாஹி ஓய்வுபெறுவதைக் கருத்தில் கொண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி 1961-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பிறந்தவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த சஞ்ஜிப் பானர்ஜி, கொல்கத்தா, டெல்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
2006-ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்ஜிப், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!