ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
Tamilnadu

"பாஜக அரசியல் கட்சியாக செயல்படவில்லை; முரட்டுத்தனமான எந்திரமாக செயல்படுகிறது"- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

"பா.ஜ.க அரசியல் கட்சியாக செயல்படவில்லை; முரட்டுத்தனமான எந்திரமாக செயல்படுகிறது" என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம், “கொரோனா தொற்று மெய்ஞானம், விஞ்ஞானம் முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளது. விஞ்ஞானிகள் முயற்சியால் 9 மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பைத் தேடி மக்கள் இடம்பெயர்வது, நல்ல அரசு இல்லை என்பதையே காட்டுகிறது. ஏழை விவசாயிகள் பலருக்கு ரூ.6 ஆயிரம் போய்ச் சேரவில்லை. இந்தத் திட்டத்தில் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகளுக்கு பணம் கிடையாது.

அரசை எதிர்த்துப் பேசினால் வழக்கு, சிறை தான். ஜனநாயகம் நாளுக்கு நாள் சிதைக்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண் திருத்தச் சட்டத்தைக் கேட்கவில்லை. இந்த சட்டத்தில் ஜனநாயகம் இல்லை. நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை கிடையாது. போராடுபவர்களை தீவிரவாதிகள் என கொச்சைப்படுத்துவது வேதனையாக உள்ளது.

மாநிலப் பட்டியலை மத்திய அரசு சிதைக்கிறது. கொரோனாவால் 13 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 100 நாள் வேலைத் திட்டத்தால்தான் ஏழைகள் உயிர் வாழ்கின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அரசு அமைய வேண்டும்.

பா.ஜ.க அரசியல் கட்சியாக செயல்படவில்லை. முரட்டுத்தனமாக எந்திரமாகச் செயல்படுகிறது. மோடி, வாஜ்பாயை போல ஜனநாயகவாதி அல்ல. பா.ஜ.க சகிப்புத்தன்மை இல்லாத கட்சி” எனத் தெரிவித்தார்.

Also Read: “மக்களின் வரிப்பணத்தை அ.தி.மு.கவின் கட்சிப் பணத்தை போல வழங்குவதா?” - பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!