Tamilnadu
“தனித்திறன் போட்டிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு” : மோடி அரசிடம் தமிழ் மொழியை அடமானம் வைத்த எடப்பாடி அரசு!
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. அந்த நாளில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான இளைஞர்களுக்கு தனித்திறன் போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், மாநில அளவிலான போட்டிகள் வருகின்ற ஜனவரி மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும், தேசிய அளவிலான போட்டிகள் 12ஆம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாட்டுப்புற நடனம், ஓரங்க நாடகம், கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், நாட்டுப்புறப்பாட்டு, பரதநாட்டியம், வீணை, புல்லாங்குழல்,ஒடிசி நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கை அமலில் இருப்பதால், தங்களுடைய தனித்திறமைகளை ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேர அளவில் வீடியோ பதிவு செய்து மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பவேண்டும் எனவும் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டுரை, கவிதை, நாடகம் ஆகியவை இந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அதேபோல வேறு எந்த மாநில மொழிகளுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தமிழாசிரியர்கள், இளைஞர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பேசிய தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாநில சிறப்பு தலைவர் அ.ஆறுமுகம், தமிழ்மொழி மிகவும் மூத்த மொழி, விவேகானந்தர் பிறந்த தினத்தன்று மத்திய அரசு பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே சமயத்தில் இந்தப் போட்டிகளில் தமிழ் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதனை அப்படியே ஏற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது மிகவும் மோசமான விஷயம். இந்தப் போட்டியினை தமிழில் நடத்தியிருந்தால் பல்வேறு இளைஞர்கள் மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பார்கள்.
ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க அரசு அமர்வதற்காக எப்படி எல்லாம் தமிழ் மொழியை புறக்கணிக்க வேண்டுமோ அப்படி எல்லாம் புறக்கணிகிறது. அ.தி.மு.க அரசு தமிழை முற்றிலுமாக புறக்கணிக்கும் நோக்கில் நடந்து கொள்கிறது. தமிழ்மொழியை அவமானப்படுத்தி வரும் மத்திய அரசுக்கு, அ.தி.மு.க அரசு தமிழ்நாட்டை அடமானம் வைத்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!