Tamilnadu

“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா?” - எடப்பாடி அரசின் தடை குறித்து துரைமுருகன் கிண்டல்!

தி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பொன்னையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் மேம்பாலம் பழுதடைந்தது. இதனை இன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “கிராம சபை கூட்டம் என்கிற சொற்களை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவர், அதிகாரிகள் பங்கேற்பது மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்தும் கிராமசபை கூட்டம்.

தி.மு.க சார்பில் நடத்தப்படும் கூட்டத்தை கிராம சபை கூட்டம் என்று சொல்லக்கூடாது என்றால் மக்கள் சபை கூட்டம் என்று சொல்வோம். தி.மு.க-வின் கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை பார்த்து அ.தி.மு.கவினர் மிரண்டுபோய் கிராமசபை கூட்டம் நடத்தக்கூடாது என்று தடை விதிக்கின்றனர்.

சீப்பை ஒளித்து வைத்துக்கொண்டால் கல்யாணம் நின்று போய்விடுமா என்ற பழமொழிக்கு ஏற்ப முதல்வர் நடந்து கொள்கிறார். கிராமசபை கூட்டம் நடத்தினால் வழக்குப் போடுவேன் என்று மிரட்டுகிறார்கள். தி.மு.கவினர் மிசா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பார்த்தவர்கள். இதுபோன்ற மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்கள் ” எனத் தெரிவித்தார்.

Also Read: “தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து உறுதி” - அனிதா நினைவு நூலகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!