Tamilnadu

“8 வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய 92% விவசாயிகளின் பெயர்களை வெளியிட தயாரா?”: முதல்வருக்கு விவசாயிகள் கேள்வி!

சென்னை சேலம் இடையே 276 கி.மீ., தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்க அ.தி.மு.க அரசு திட்டமிட்டது. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், எந்த வகையிலாவது எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என, முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு.

இந்நிலையில், நேற்று அரியலூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எட்டு வழிச் சாலைக்கு திட்டத்திற்கு 92% விவசாயிகள் நிலம் தரத் தயாராக உள்ளதாகவும் 8% சதவீத விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பதாகவும் பொய்யான தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மாளகாப்பாடி கிராமத்தில் உள்ள விவசாயி மாணிக்கம் என்பவருடைய தோட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தும், அரசிடம் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இன்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், நேற்று எட்டு வழி சாலைக்கு ஆதரவாகப் பேசியதை கண்டித்தும், வேளான் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்தியதைக் கண்டித்தும், சேலம் மாவட்டத்தில் எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு 92 சதவீத விவசாயிகள் நிலத்தை வழங்கி விட்டார்கள் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மனமுவந்து நிலம் வழங்கிய 92 விவசாயிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட முதலமைச்சர் தயாரா? மோடியுடன் சேர்ந்து பொய் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அவரது வருகைக்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பீகாரில் பசுவைக் கடத்தியதாக கூறி இந்துத்வா கும்பல் கொலைவெறித் தாக்குதல்” : இஸ்லாமிய இளைஞர் படுகொலை!