Tamilnadu
“SI தேர்வில் இடஒதுக்கீடு இல்லை..? தி.மு.க கொண்டுவந்ததால் அலட்சியப்படுத்துவதா..?” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.ஐ தேர்வில், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் காலியாக இருந்த 969 சார்பு ஆய்வாளர்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலமான வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டை பின்பற்றாததால் தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாய்மொழிக் கல்விக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அளிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முன்னுரிமையை அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது.
கடந்த ஜனவரி மாதத்தில் 969 பணியிடங்களுக்கு நடைபெற்ற சார்பு ஆய்வாளர் தேர்வில் இந்த இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் தமிழ்வழியில் பயின்ற 196 இளைஞர்கள் சார்பு ஆய்வாளர்களாகத் தேர்வுபெற்றிருக்க முடியும். ஆனால் அ.தி.மு.க அரசின் மெத்தனத்தால், தமிழ்வழி பயின்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த இடஒதுக்கீடு இல்லாமலேயே நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே தமிழ்வழி பயின்ற விண்ணப்பதாரர்கள் 20 சதவீத இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்றிடும் வகையில், தற்போது நடைபெறும் சார்பு ஆய்வாளர்களுக்கான நேர்முகத்தேர்வினை மாற்றியமைத்திட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ்வழி பயின்ற இளைஞர்களுக்கான இடஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!