Tamilnadu

போலி விசா வழங்கிய மோசடி கும்பல் - பாதிக்கப்பட்டவர்களே வளைத்துப் பிடித்து போலிஸில் ஒப்படைத்த சம்பவம்!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்களை, பாதிக்கப்பட்டவர்களே ஒன்று சேர்ந்து வளைத்துப் பிடித்து போலிஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசாவை சேர்ந்த ராஜூ, சுப்ராத் குமார் உள்ளிட்ட குழுவினர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு மலேசிய நாட்டில் கட்டிட வேலை வாங்கி தருவதாகக் கூறி அவர்கள் அனைவரையும் விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்து முன்பணமாக சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர் மலேசியாவுக்கு செல்வதற்கான முழு தொகையான 50 ஆயிரத்தில் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் பணத்தை விசா தயாரானதும் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.

விசா தயாராக உள்ளதாகக் கூறி ஐம்பது பேரையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு வரவழைத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தமிழ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். நேற்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ராத் குமார் போலோ என்பவருடன் ஐந்து பேர் அந்த தனியார் ஹோட்டலுக்கு வந்து 50 பேருக்கும் மலேசிய நாட்டிற்கு செல்வதற்கான விசாவை கொடுத்துள்ளனர்.

பின்னர் அனைவரிடமிருந்தும் தலா 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இரவு 9 மணியளவில் சென்றுவிட்டனர். செல்லும் முன்பாக 50 பேரிடமும் இன்று காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் தயாராக இருக்கவேண்டும் எனவும் கூறிச் சென்றுள்ளனர். இதன் பின்னர் அந்த ஐம்பது பேரில் ராஜேஷ் குமார் மதன் என்பவர் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று வந்த வந்தவர் என்பதால் சுப்ராத் குமார் போலோ கொடுத்த விசாவில் உள்ள பார்கோடை அருகில் உள்ள இன்டர்நெட் மையத்திற்கு சென்று சோதித்துப் பார்த்துள்ளனர்.

அதில் மலேசியா செல்வதற்கான எந்த விவரங்களும் வராததால் அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுப்ராத் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது உடனடியாக அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு நேரில் வருவதாகவும், அதற்கு முன்பாக வேறு இன்டர்நெட் மையத்தில் சென்று சோதியுங்கள் என கூறியிருக்கிறார்.

மற்றொரு இன்டர்நெட் மையத்தில் விசா பார்கோடை சோதனை செய்தபோதும் அதேபோன்று மலேசியா செல்வதற்கான எந்தவித தகவலும் வராததால் மீண்டும் சுப்ராத் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அனைவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சுதாரித்த 50 நபர்களும் 5 குழுக்களாகப் பிரிந்து தியாகராய நகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையம், விமான நிலையம் எனத் தேடியுள்ளனர்.

இதில் ஒரு குழு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேடிக் கொண்டிருந்த போது சுப்ராத் குமார் போலோ உட்பட ஐந்து நபர்கள் பெங்களூருக்கு தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து நபர்களையும் துரத்தியதில் மூவர் தப்பி ஓடிவிட்டனர் ராஜேஷ்குமார் பாண்டா, தினேஷ் பட்ரா ஆகிய இருவரை துரத்திப் பிடித்தனர்.

பிடிபட்ட இருவரையும் உடனடியாக அருகில் உள்ள கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோயம்பேடு போலிஸார் சம்பவம் நடைபெற்ற அனைத்து இடங்களும் பூக்கடை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் பூக்கடை காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்ற உள்ளனர்.

Also Read: பஜ்ரங்தள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை - பா.ஜ.க ஆதரவு ஃபேஸ்புக் : அம்பலப்படுத்திய வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!