Tamilnadu
அதிமுக ஆட்சியில் தொடரும் கந்துவட்டி கொடுமை.. விழுப்புரத்தில் 3 குழந்தைகள் உட்பட ஐவர் தூக்கிட்டு தற்கொலை !
தி.மு.க. ஆட்சியின் போது தொடங்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் அதிமுக ஆட்சியினரால் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது என தென்காசியில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசாரக் கூட்டத்தில் விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் கூறியிருந்தார்.
24 மணிநேரம் முழுமையாக நிறைவடைதற்கு முன்பே அதனை மெய்ப்பிக்கும் வகையில் விழுப்புரம் அருகே கந்து வட்டிக்காரரின் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). தச்சு தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். மோகன்ராஜ் தனது குடும்பத்தை நிர்வகிப்பதற்காக ஒருவரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் போனதால் மோகன் ராஜால் வாங்கிய கடனை குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாத கடன் கொடுத்தவர் வாங்கிய பணத்தை உடனடியாக தருமாறு மோகன்ராஜுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மோகன்ராஜும் அவரது மனைவி விமலேஸ்வரி மற்றும் குழந்தைகள் ஐவரும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மோகன்ராஜின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்து வீட்டினர், மோகன்ராஜின் வீட்டு ஜன்னல் வழியே பார்த்த போது மோகன்ராஜ் குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சொந்தமாக தச்சு பட்டறை தொடங்க வங்கி மற்றும் கந்து வட்டிக்கு தனி நபர்களிடம் இருந்தும் ரூ.40 லட்சம் அளவிற்கு மோகன்ராஜ் கடன் வாங்கி இருந்ததாகவும், இந்த கடன் தொல்லைக் காரணமாகவே மன உளைச்சலில் இருந்து வந்த மோகன்ராஜ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!