Tamilnadu

“நீலகிரி மலை ரயிலை தனியாரிடம் ஒப்படைத்து, காவிமயமாக்கும் மோடி அரசை கண்டித்து போராட்டம்” : 200 பேர் கைது!

விண்ணை முட்டும் அளவிற்கு அழகிய மலைகள், கண்ணுக்கெட்டும் தூரம் வரை அடர்ந்த வனங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள், தேயிலைத் தோட்டங்கள் நடுவே மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை 16 பெரிய பாலங்கள், 32 சிறு பாலங்கள், 15-க்கும் மேற்பட்ட குகைகளுக்குள் நுழைந்து நீராவி இன்ஜினுடன் குழந்தைப் போல் தவழ்ந்து ஓடும் மலை ரயிலின் வயது 115 கடந்தது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 80% சுற்றுலாப்பயணிகள் இந்த நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவது வழக்கம். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி எஞ்சின் பயணமும், குன்னூர் முதல் உதகை வரை டீசல் இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் பயணம் செய்ய தென்னக ரயில்வே மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை பயணம் செய்ய 30 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக மலை ரயில் சேவை 8- மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 5ஆம் தேதி மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் மேட்டுப்பாளையம் மலை ரயில் நிலையத்திற்கு வந்த மலை ரயில் தனது அழகிய வண்ணமான நீல நிறத்திலிருந்து மாறுபட்டு காவி மயமாக்கப்பட்ட அதிலிருந்த பணிப்பெண்கள் உடையும் காவியமாக., சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியும் காவி நிறத்தில் உள்ள கவரில் அடைத்து வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மலை ரயிலில் உள்ள இருக்கை வண்ணமும் காவி மயமாக மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் ஒரு சுற்றுலாப் பயணி 30 ரூபாய் கட்டணத்தில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை பயணம் செய்த காலம் மாறி ஒரு பயணி பயணம் செய்ய 3 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் தனியார் சார்பில் காவி வண்ணத்தில் தனியார் டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது வேதனையின் உச்சம்.

இதனால் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் அனைத்து தரப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அதேவேளையில் ரயிலை தனியாரிடம் ஒப்படைக்கவில்லை என ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது.

குழந்தைபோல் நீலகிரி மலையில் தவழ்ந்து ஓடிய மலை ரயில் தற்போது காவி வண்ணத்தில் மாறி இருப்பதற்கு அனைத்து தரப்பு மக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடைப்படையில் தனியாரிடம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், கோவை ரயில் நிலையங்களில் போலிஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “TN 43 : காவி வண்ணத்தில் ஊட்டி மலை ரயில்” : நபர் ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணம் - தவிக்கும் சுற்றுலா பயணிகள்!