Tamilnadu

மு.க.ஸ்டாலின் மீதான தமிழக அரசின் 4 அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை விமர்சித்தும், தமிழக அரசு குறித்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனித்தனி வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அந்த வழக்குகளில் 12 வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், அரசு மற்றும் முதல்வருக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் விமர்சனம் தானே தவிர அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடியவை அல்ல என வாதிட்டார். மேலும் இந்த 12 வழக்குகளில் 3 வழக்குகளுக்கான அரசாணைகளை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளாக குறிப்பிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என்றும், அதேசமயம் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்பாக தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

Also Read: ஊழல் முகட்டில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அப்பாவி வேடத்தை கலைத்த ஐகோர்ட் - K.N.நேரு கடும் விமர்சனம்!