Tamilnadu

“தமிழகத்தில் எந்தவிதமான தொழில் வளர்ச்சியும் எடப்பாடி அரசு உருவாக்கவில்லை” : கனிமொழி எம்.பி சாடல்!

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது.

அதன்படி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தனது பிரச்சாரத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதேப்போல், தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தேர்தல் பரப்புரையை சேலத்தில் இருந்து துவங்கியுள்ளார்.

முன்னதாக, எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் முதற்கட்டமாக மகளிர் சுய உதவிக் குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களின் கருத்துக்களை கேட்டறிந்த கனிமொழி எம்.பி, “பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்போது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீட்டெடுக்கப்பட்டு உச்சத்தை தொடும். குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. தானும் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார்.

மேலும், தமிழகத்தில் பெண்களின் கல்விக்காக தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் தற்போது பெண் கல்வி கேள்விக்குறியாகி விட்டது. மேலும் தமிழகத்தில் எந்தவிதமான தொழில் வளர்ச்சியும் இல்லை. அதேபோல் ஒரு வேலைவாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்றைய ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியைப் பொதுமக்கள் விரும்பவில்லை. இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புபடி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்று, தி.மு.க ஆட்சி அமைப்பது நிச்சயம். மக்களுக்காக, நல்ல திட்டங்களைச் செயல்படுத்த, தி.மு.க காத்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பர்கூர் மலை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுடன் சந்தித்து உணவருந்தி கலந்துரையாடினார்.

முன்னதாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., “உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல கோடி செலவு செய்து இன்று வரை ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை. இதனால வேலை வாய்ப்பு இல்லை. எப்போது காலில் விழும் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை காப்பாற்ற அமித்ஷா மோடி காலில் விழுகின்றார்.

மலைவாழ் மக்களின் குழந்தைகள் பயில போதிய ஆசிரியர்கள் மலையாளி சாதி சான்றிதல், குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் கிடைக்க செய்வோம்” என்றார். இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Also Read: "2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!