Tamilnadu

“தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு; தளர்வுகள் என்ன?” : தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:

1) கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

2) மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை), முதுநிலை வகுப்புகள்) 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

3) நீச்சல் குளங்கள், விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4) வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

5) சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

6) பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

7) உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

- இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.

8) வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளவுர்களுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அனைவரும் தேசவிரோதிகள் என்றால்; யார் தான் இந்தியர்கள்?” : மோடி அரசை வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி!