Tamilnadu

“மினிகாய் தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்ட கனிமொழி MP” : தி.மு.க உதவியால் நெகிழ்ந்த குடும்பங்கள்!

தூத்துக்குடி அடுத்துள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரிய குணசேகரன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜான்சன், ராஜன், அந்தோணிராஜ், தீபன், ஜோசப், வில்சன், சின்ராஜ் அந்தோணி பிச்சை, விஜய் ரோஸ்டட் ஆகிய 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

கடந்த 18ம் தேதி கடலில் வீசிய காற்று காரணமாக திசைமாறி மினிகாய் தீவு கடற்பகுதியில் இந்த மீனவர்களின் விசைப்படகு சென்றுள்ளது. அப்போது அங்கு வந்த மினிகாய் தீவு கடற்படையினர் பத்து மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

இதை தொடர்ந்து தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அந்த பத்து மீனவர்களையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி-யிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து கனிமொழி எம்.பி மத்திய அரசுடன் பேசி அந்த மீனவர்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த பத்து மீனவர்களும் அவர் விசைப்படகும் விடுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் இன்று அதிகாலையில் தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்ட தி.மு.க-வினர் இந்த மீனவர்கள் சந்தித்து மீனவர்கள் கடலில் திசை மாறி சென்றது குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும் மீனவர் இருக்கவேண்டிய அனைத்து உதவிகளும் தி.மு.க செய்யும் எனவும் உறுதி அளித்தனர். அப்போது மீனவர்கள் தங்களை மீட்பதற்கு உதவிய கனிமொழி எம்.பி மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் தி.மு.க சார்பில் செய்யப்படும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் இளையராஜா, மாவட்ட கவுன்சிலர் மைக்கேல் தவமணி, மாநில மாணவரணி துணை செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

Also Read: விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக தி.மு.க ஏற்கும் : கனிமொழி எம்.பி