Tamilnadu

“தமிழகத்தை காவி மயமாக்க தி.மு.க விடாது” : 4வது நாள் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது.

அதன்படி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 20ம் தேதி முதல் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தைத் துவங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து மக்கள் திரளோடு தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி, 2வது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் பரப்புரையின் மேற்கொண்ட போது மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று முன்தினம் தனது தேர்தல் பரப்புரையை துவங்கிய, உதயநிதி ஸ்டாலின் குத்தாலம் கடைவீதியில், திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார்.

அதன்பின்னர் தொடர்ந்து பிரச்சாரத்திற்கு அனுமதிக்காத காவல்துறை, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து, குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

பின்னர், வழக்கத்திற்கு மாறாக இரவு 11 மணி நேரம் வரை திருமண மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலினை அடைத்து வைத்த சம்பவத்தைக் கண்டித்து தி.மு.கவினர் மண்டபத்தின் வெளியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்தில் பல பகுதிகளில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் அவரை விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்ட பின்னர் இரவிலும் தனது பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் 4வது நாள் பிரச்சாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் முடித்துள்ளார்.

முன்னதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற 4ம் நாள் பயணத்தை கும்பகோணத்தில் இருந்து துவங்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், காலை 10.45 மணிக்கு தஞ்சை மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சஞ்சய் சேகர், உதயநிதி ஸ்டாலினிடம் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தங்கியிருந்த விடுதியிலேயே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1.40 மணிநேரமாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பாடாத நிலையில், எஸ்.பி தேஷ்முக் சஞ்சய் சேகர் வெளியேறினார். இதனிடையே பேச்சுவார்த்தை என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை ஓட்டலிலே எஸ்.பி தடுத்த தகவல் அறிந்து ஏராளமான தி.மு.க-வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பகல் 12.45 மணிக்கு ஓட்டலில் இருந்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணத்துக்கு புறப்பட்டார்.

அந்த பயணத்தின் போது, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் 16 ஜமாத்தார்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “‘விடியலை நோக்கி ஸ்டாலின்குரல்’ பிரச்சாரத்தை நான் முன்னெடுத்ததில் இருந்து, நான் சென்ற இடமெல்லாம் மக்கள் எழுச்சி, வரவேற்பு புதிய உற்சாகத்தை கொடுத்தது. திருக்குவளையில் பிரசாரத்தை துவங்கியபோது கைது செய்யப்பட்டேன். அப்போது தலைவர் கலைஞர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.

சிறுபான்மையினரை நாங்கள் சொந்தமாக பார்த்து வருகிறோம். உங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் முதலில் வந்து நிற்பது தி.மு.க தான். சி.ஏ.ஏ போராட்டத்தின்போது தான் எனது முதல் கைது நிகழ்ந்தது. உங்களுக்கு இடஒதுக்கீடு தந்தது கலைஞர் தான். தமிழகத்தை காவி மயமாக்க தி.மு.க விடாது.” எனத் தெரிவித்தார்.

அதனையடுத்து தஞ்சை மாவட்டம் திருவையாறில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதேபோல், தஞ்சை ராஜகிருஷ்ணபுரத்தில் வீணை இசைக்கருவி செய்யும் கலைஞர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து தஞ்சையில் வணிகர்கள்-வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடியானார். அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அரசு உங்களின் வாழ்வில் ஒளியேற்றும் என்று வாக்குறுதி அளித்தார்.

Also Read: “திட்டமிட்டபடி பயணம் தொடரும்” : விடுவிக்கப்பட்ட பின் இரவிலும் பிரச்சாரத்தை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின்!