Tamilnadu

“பணம் கட்ட வசதியின்றி சீட் தேர்வு செய்யவில்லை; அரசு முன்பே அறிவிக்காதது ஏன்?” - திருப்பூர் மாணவி கண்ணீர்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அரசின் தாமாத அறிவிப்பால், பணம் கட்ட வசதியின்றி மருத்துவ படிப்பைத் தேர்வு செய்யாமல் சென்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகள் போக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் ஒதுக்கப்பட்டால் பல லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு போராடி மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க வசதியின்றி இடங்களை தேர்வு செய்யாமலேயே வேதனையுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின், அரசியல் உள்நோக்கத்தோடு கூடிய மிகத் தாமதமான முடிவால் அரசுப் பள்ளி மாணவர்கள் பலரின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளது. பணம் கட்ட வசதியின்றி மருத்துவ படிப்பைத் தேர்வு செய்யாமல் சென்ற மாணவர்கள் அரசின் தாமதமான அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் தனக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை காரணமாக கல்லூரியை தேர்வு செய்யாமல் வேதனையுடன் திரும்பியுள்ளார்.

தற்போது அரசின் அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள அந்த மாணவி, இதுகுறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எனக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக சேர முடியவில்லை.

அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை ஏற்கும் அறிவிப்பை முன்பே வெளியிட்டிருந்தால் நானும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டை தேர்வு செய்திருப்பேன். எனக்கு அரசு தயவுசெய்து சீட் வழங்க உதவ வேண்டும்” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் தி.மு.க ஏற்கும் என அறிவித்த சில மணிநேரங்களில், அதே அறிவிப்பை வெளியிட்ட அ.தி.மு.க அரசு, கலந்தாய்வு தொடங்கும் முன்னரே இதைத் தெளிவுபடுத்தியிருந்தால் பல மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள் என பெற்றோர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Also Read: “தி.மு.க தலைவர் அறிவித்தபிறகு அறிவிக்கும் முதல்வர்.. இந்த எண்ணம் முதலில் வரவில்லையே?”- துரைமுருகன் சாடல்!