Tamilnadu

மரபை மீறி அரசு விழாவில் கூட்டணி குறித்து பேசுவதா? அதிமுக-பாஜக படு தோல்வியையே தழுவும் -முத்தரசன் விமர்சனம்

அரசுக்கு சொந்தமான அரசு கட்டடத்தில் நடந்த அரசு விழாவில் அரசு திட்டங்கள் குறித்து பேசுவதற்கு பதிலாக அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மரபு மீறி அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்துகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது “தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டது. ஆனால் தற்போது பா.ஜ.க தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து பாஜக பீகாரில் தேர்தலை நடத்தி முடித்தது போல் தமிழகத்திலும் தேர்தலை நடத்த முயற்சி செய்கிறது. முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குகளை தபால் வாக்குகள் பதிவு செய்தால் அதிகாரிகளே அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை விட்டுள்ளது. இது வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும்.

தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் வன்மையாக கண்டிக்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும். அரசியல் பேசுகிறார் மத்திய அமைச்சர் தனி விமானத்தில் வந்து அரசு கூட்டம் என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். தமிழக முதல்வரும் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று அரசியல் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளை மட்டும் முடக்கி வருகின்றனர். அரசியல் குறித்தான எந்த நிகழ்வுகளை நடத்த விடாமல் முடக்கி வருகிறார்கள். திருக்குவளை மற்றும் நாகப்பட்டினத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டு உள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் உடன் இருப்பவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

அதிமுக பாஜக கூட்டணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வியை தழுவியது. அதேபோல வரும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை தழுவும். மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது முதல்வரின் கனவாக இருக்கலாம். முதல்வர் கனவு காணுவதற்கு உரிமை உள்ளது. அதனை கலைக்க விரும்பவில்லை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

Also Read: “தி.மு.கவின் சாதனைகள் இதோ.. பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?”- அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!