Tamilnadu
“இருள் நீக்கி ஒளி தரும் துறை தான் பத்திரிக்கைத் துறை” : மு.க.ஸ்டாலின் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்து!
பத்திரிகையாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசியப் பத்திரிகையாளர் தின வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “''காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்!
இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
வாய்த்திடும் எழுச்சி நீதான்!
ஊரினைக் காட்ட இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே!"
- என்று பத்திரிகைகளைப் போற்றினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இருள் நீக்கி ஒளி தருதல் மட்டுமல்ல, அந்த ஒளியை பேதம் இல்லாமல் வழங்கும் துறை தான் பத்திரிக்கைத் துறை.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத் துறை சொல்லப்படுகிறது. பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் பத்திரிகைத் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் இருக்கிறது.
மக்களுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பெருங்கடமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அத்தகைய பத்திரிகையாளர் தினமாக இந்திய அளவில் நவம்பர் 16 ஆம் நாள், ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட இந்த நாளை, 1996 ஆம் ஆண்டு முதல் தேசியப் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
ஜனநாயகம் - சமத்துவம் - சமூகநீதி - மதநல்லிணக்கம் - ஏழை நடுத்தர வர்க்க மக்கள் நலன் - ஆகியவை எதேச்சதிகார மனம் கொண்டவர்களால் எள்ளிநகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காகப் போராட, வாதாட, எழுத, எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதனை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும் என்று இந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்களது வெற்றியில் உலக வெற்றி உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான்!
பத்திரிகையாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!