Tamilnadu

“அண்ணா பல்கலை விவகாரம் குறித்து விசாரணை குழு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்”-டி.கே.எஸ் இளங்கோவன் கோரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணையில், துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் பெறப்பட்டு இருக்கின்றன என்றும், இவைதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், சூரப்பா மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் ஒவ்வொன்று குறித்தும் அவர் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள்ளாக தமிழக அரசிடம் அறிக்கை அளிப்பார் என்றும், அதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் 13 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை என வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன்படி 80 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும் சூரப்பா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கூடுதல் பதிவாளர் நியமனத்தில் சிண்டிகேட் ஒப்புதல் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

துணைவேந்தர் சூரப்பா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது மகளை பல்கலைக்கழகத்தில் நியமித்திருப்பதாகவும் ஒரு புகார் தரப்பட்டுள்ளது .

மேலும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதேபோல் தேர்வுத்துறை அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான நடவடிக்கைகளில் போலியான சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் வந்திருப்பதாக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து தி.மு.க செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி பேசுகையில், “பல்கலைக்கழகம் என்றால் அதன் வேந்தர் மாநில ஆளுநராக இருப்பார். அமைச்சர் இணை வேந்தராக இருப்பார். அதன்பிறகு தான் துணைவேந்தர் வருவார்.

எப்படியாவது உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்கான அனைத்து ஆக்கங்களையும் பறிக்கும் வகையில் மத்திய அரசுக்கு ஆதரவாக துணைவேந்தர் சூரப்பா செயல்படுகிறார். தமிழகத்தில் ஆளுநர் தனி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மாநில அரசின் அதிகாரங்களை சூரப்பா ஏன் மதிக்காமல் இருந்து வருகிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து என்கிற பெயரில் தமிழர்களுக்கான இடங்களை பிறமாநிலத்தவர்களுக்கு தாரைவார்க்க நினைக்கிறார் சூரப்பா.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் என்ன நடந்தது என்பதையாவது கலையரசன் குழு வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சூரப்பா என்ன முதல்வரா? அண்ணா பல்கலையை காவி மயமாக்குவதற்கான ரகசிய கூட்டணியா? - மு.க.ஸ்டாலின் விளாசல்