Tamilnadu
“தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்குக” - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்கள் 2008-09ஆம் ஆண்டில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் துவங்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் 899 உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2011ல் அவற்றை ஒன்றாக இணைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.
தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், சிலரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒப்பந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் புதியவர்களை நியமிக்கவும் தடைவிதிக்கக் கோரியும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யக்கோரியும் உதவி பேராசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஒப்பந்த அடிப்படையில் 310 பேரும், நிரந்தர அடிப்படையில் 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 556 பேரும் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின்படி, 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில், 25 ஆயிரத்து 680 இளங்கலை மாணவர்களுக்கு ஆயிரத்து 284 பேராசிரியர்களும், ஆயிரத்து 806 முதுகலை மாணவர்களுக்கு 120 பேராசிரியர்களும் என, ஆயிரத்து 404 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக ஆசிரியர்களை நீக்கிவிட்டு மீண்டும் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அவசியம் இல்லை எனக் கூறி, இதுதொடர்பாக 2019ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மனுதாரர்கள் உள்ளிட்ட 310க்கும் மேற்பட்டோர் தற்காலிக அடிப்படையில் உள்ளதால், பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், போதிய தகுதியும் அனுபவமும் உள்ள மனுதாரர் போன்றவர்களை, நிரந்தரப் பணியில் காலியிடம் ஏற்படும்போது நியமிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர் உள்ளிட்டோரை டிசம்பர் 1ஆம் தேதி முதல் தற்காலிக பணியாளர்களாக பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!