Tamilnadu
“சென்னை எல்லைக்குள் வரும் ECR, OMRல் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுங்கள்” - தயாநிதி மாறன் வேண்டுகோள்!
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தேசிய நெடுஞ்சாலை கட்டண நிர்ணய விதிகள் 2008 இன் படி மாநகராட்சி அல்லது நகராட்சி வரம்புகளுக்குள் 10 கிலோமீட்டர் சுற்றளவில் சுங்கச்சாவடி அமைக்கப்படக்கூடாது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கி சென்னை நகர எல்லை வரம்புகளை, பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்தபோது மகாபலிபுரம் சாலை (ITEL) மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வந்தது.
மேலும் தொழில்துறை வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் தகவல் தொழில்நுட்பத்துறை பெறப்போகும் பிரம்மாண்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்தப் பகுதியின் வளர்ச்சியை மனதில் வைத்து ராஜீவ் காந்தி சாலை அதிவேக நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. எனவே மக்கள் பயன்பாட்டில் முக்கிய பகுதியாக விளங்கும் இச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற செயலாகும்.
குறிப்பாக ஓ.எம்.ஆர் சீவரம், ஏகாத்தூர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஈ.சி.ஆர்., துரைப்பாக்கம், பல்லாவரம் ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளும் மேற்குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அமைந்திருப்பதால் அவற்றை மூட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை கட்டண நிர்ணய விதிகள் 2008இன் படி 60 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இதுபோல சுங்கச்சாவடி அமைப்பது என்பது தடை செய்யப்பட்டதாகும்.
முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட உத்தண்டி நகர பஞ்சாயத்தானது பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின்போது சென்னையுடன் இணைந்தது. எனவே உத்தண்டியில் இருந்து தொடங்கும் ஈ.சி.ஆர். சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது என்பது தேசிய நெடுஞ்சாலை கட்டண நிர்ணயம் விதிகள் 2008ற்கு எதிரான செயல். 2018ஆம் ஆண்டில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ‘தேசிய நெடுஞ்சாலை விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுங்கச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டதோடு, செயல்பாட்டில் இருக்கும் அனைத்து சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 8இன் படி செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தியது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று செய்தி வெளியிட்டுள்ளது
இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரத்தின்கீழ் வரும் ஓ.எம்.ஆர். மற்றும் ஈ.சி.ஆர். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துவதோடு, நிரந்தரமாக இந்த சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவது தொடர்பாகவும் நிரந்தரமாக மூடுவது தொடர்பாகவும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!