Tamilnadu
“வேலையிழப்பை சரிசெய்யாத பா.ஜ.க, வேல் யாத்திரை என மக்களை திசைதிருப்புகிறது” - டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்!
இந்தியாவில் பத்து கோடிப் பேருக்கு மேல் வேலையிழந்து தவித்து வரும் நிலையில் பா.ஜ.கவினர் வேல் ஊர்வலம் நடத்தி மக்களை திசைதிருப்புவதாக தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி விமர்சித்துள்ளார்.
‘எல்லோரும் நம்முடன்’ தி.மு.க இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆர்.கே.நகர் வள்ளுவர் தெருவில் நடைபெற்றது. தி.மு.க செய்தி தொடர்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
பின்னர், தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வேல் ஊர்வலம் என்று பா.ஜ.க அறிவித்திருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ பத்து கோடிப் பேருக்கு மேல் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி கவலைப்படாமல் அதை மறைப்பதற்காக வேல் சுமந்து ஊர்வலம் செல்வதாக அறிவித்திருக்கிறார்கள்.
மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல துன்பங்களின் பிடியில் உள்ளார்கள். மக்களை காப்பாற்றாமல் கடவுளை காப்பாற்றுவதற்காக புறப்பட்ட அரசாக தங்களை காண்பித்துக் கொள்ள, மக்களை திசை திருப்ப பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகம் தற்போது பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. மக்களிடம் நேரடியாகச் சென்று, மக்களைக் கேட்டறிந்து அந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளை அந்தத் துறையில் சிறப்பாக பணியாற்றும் அறிஞர்கள், வல்லுநர்கள் உதவியுடன் அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களுக்கு வாக்குறுதி ஆக எடுத்துரைப்போம். சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற தலைவர் கலைஞர் அவர்ககள் சொன்னதற்கேற்ப திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும்.” என்றார்.
மேலும், “அ.தி.மு.க அரசு பல வகையிலும் தன்னிச்சையாக இயங்க முடியாத ஒரு அரசாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மத்திய அரசிடம் பணிந்து போக வேண்டிய நிலை இங்கே உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாமல், மக்களை அவமதிக்கும் சூழல் நிலவுகிறது. தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு அரசாகவும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்காக பாடுபடக்கூடிய அரசாகவும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!