Tamilnadu
புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் சரிந்து விபத்து : அ.தி.மு.க ஆட்சியின் அவலம்!
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்துத் தரக்கோரி அம்மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதற்காக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் சத்தியமூர்த்தி அண்ட் கோ நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டனர்.
45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் தளம் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில் நேற்று இரவிலும் பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதில் நுழைவாயில் முகப்பு கான்கீரிட் தளம் அமைக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிலிருந்த தூண் மற்றும் முன்பகுதி முழுவதுமாக இடிந்து சேதமடைந்துள்ளது.
அப்போது பணியிலிருந்த வட மாநில தொழிலாளர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் மாவட்ட காவ்சல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தரமற்ற கம்பிகள், சிமென்ட் பயன்படுத்தப் படுகின்றனவா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புதிய கட்டடம் சரிந்து விழுந்தது அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்ததாகவும், அ.தி.மு.க ஆட்சின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், கட்டிடப்பணிகள் நடக்கும்போதே விபத்து நடத்ததால் கட்டப்பட்ட கட்டிடத்தின் உறுதி பற்றி ஆய்வு நடத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கட்டுமான பணியை செய்து வரும் சத்தியமூர்த்தி அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!