Tamilnadu
“பெரியார் சிலையை அவமதிப்போரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடையுங்கள்” -தமிழக அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பங்காருபுரம் சமத்துவபுரத்தில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை சில சமூக விரோதிகள் காவி சாயத்தை ஊற்றி, அவமரியாதை செய்துள்ளனர்.
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபகாலமாக தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதிக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
அதேபோல, கடந்த மாதம் திருச்சி மாவட்டம், இனாம்புலியூரில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதற்கும் இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இத்தகைய குற்றங்களை செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழ்ச் சமுதாய மக்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதியை தம் வாழ்நாள் முழுவதும் போராடி பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட மதவாத சக்திகளால் ஏற்பட்டிருக்கிறது.
காந்தியடிகளின் வழியை பின்பற்றினால்தான் இந்து மதத்தை காப்பாற்ற முடியும். ஆர்.எஸ்.எஸ். வழியை பின்பற்றினால் இந்து மதத்தை காப்பாற்றவே முடியாது. வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் மதநல்லிணக்கம் சீர்குலைந்து சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு சமூக அமைதி கெடுவதற்கான சூழ்நிலையை தமிழக பா.ஜ.க. செய்து வருகிறது. இதை தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிப்பார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தமிழகம் ஒருபோதும் மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை அனுமதிக்காது.
எனவே, தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதை செய்ய தவறுவார்களேயானால், தந்தை பெரியாருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தார்கள் என்கிற பழி அ.இ.அ.தி.மு.க. மீது சுமத்தப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!