Tamilnadu

“தீ விபத்தில் நாசமான குடிசைகள்: வீடிழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தி.மு.க” - நெகிழ்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் 4 வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. இதில், பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு தி.மு.க,.வினர் நிவாரண பொருட்களை வழங்கி உதவினார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் வசிப்பவர் ஜெயலட்சுமி (55). நேற்று முன் தினம் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது. இதில் பற்றிய தீ மளமளவென பரவியது.

இதில் ஜெயலட்சுமியின் வீட்டின் அருகே வசித்த அங்கம்மாள்( 65 ), மனோன்மணி( 65 ), கோவிந்தராஜ் (45 ), ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் வீடுகள் எரிந்து நாசமானது. மேலும் மனோன்மணி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளும் பலியானது.

இதனிடையே முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், தீ விபத்தினால் வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்தினருக்கும் உதவி செய்ய தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் முன் வந்துள்ளனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், தி.மு.க திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தொட்டியம் ஒன்றிய குழு தலைவர் புனித ராணி, யோகேஸ்வரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், பாய் போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை நிவாரண உதவியாக வழங்கினர்.

இதுதொடர்பாக நிவாரண பெற்ற ஒருவர் கூறுகையில், “எங்கள் வாழ்வாதாரமே அந்த குடிசைதான். நாங்கள் அனைவருமே தினக் கூலித் தொழிலாளர்கள். ஏற்கனெவே, கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவித்து வருகிறோம்.

இந்த சூழலில், இந்த தீ விபத்து எங்களை நிலைகுழைய செய்தது. என்ன செய்வது என செய்வதறியாது தவித்தபோதுதான், எங்கள் பகுதியைச் சேர்ந்த தி.மு.கவினர் எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

இந்த நேரத்தில், அவர்கள் செய்த உதவி மிகப் பெரியது. அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி” என நெகிழ்ச்சியோடுத் தெரிவித்தார். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தி.மு.க நிர்வாகிகள் உதவி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: “எடப்பாடி பழனிசாமி சொல்வது உப்புக் கல்லை வைரம் என்று சொல்லும் பேதைமை” - மு.க.ஸ்டாலின் பதிலடி!