Tamilnadu

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை : சென்னையில் கொட்டும் மழையால் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதில் குறிப்பாகச் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஒரு மணி நேரமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.

அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் :

கடந்த ஒரு மணி நேரமாகப் பெய்த கனமழையின் காரணமாகச் சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாகச் சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் அண்ணா சாலையில், மழைநீர் தேங்கி நிற்பதால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாகச் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் பெருமளவில் மழைநீரானது சாலைகளில் தேங்கி வாகனங்களை மூழ்கடிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சில இடங்களில் வாகனங்கள் பழுதாகி நிற்கக்கூடிய காட்சிகளும் காணப்படுகிறது.

மேலும் மழை நீர் சாலையில் தேங்கி இருப்பதன் காரணத்தினாலும் சில முக்கிய சாலைகளில் சாலை விளக்குகள் சரிவர இயங்காததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.