Tamilnadu

“கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை மறைக்க உணவுத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்” : டெல்டா விவசாயிகள் ஆவேசம்!

அ.தி.மு.க அரசின் அலட்சிய நடவடிக்கையால் டெல்டா மாவட்டத்தில் சாலையோரங்களில் இருபுறமும் மழையில் நனைந்த நெல்லை காயவைப்பதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் முன்பாக விவசாயிகள் 10 நாட்களுக்கும் மேலாக காத்துக்கிடக்கும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் இன்று பஞ்சநதிக்கோட்டை, தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அப்போது, மழைநீரில் நினைந்து முளைத்த நெல் மணிகளைக் கண்டு கலங்கும் விவசாயிகள் இவ்வளவு பாதிப்பிற்கு பிறகும் உண்மை நிலையை மறைக்கும்விதமாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவிப்பது வேதனை அளிப்பதாகிறது.

அவர் கேட்டுச் சொல்வதற்குள் நெல் கொள்முதலே முடிந்து விடும் என்று கூறும் விவசாயிகள், ஆய்வு என்ற பெயரில் சாலையோரங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களை மட்டும் அமைச்சர் பார்வையிட்டு பொய் சொல்லி, கள நிலவரத்தை மறைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், மழைநீரில் நனைந்து முளைத்த நெல்மணிகளை கண்துடைப்பாக அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இப்பிரச்சினையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக கூறுவது தவறு. உண்மையில் தமிழக முதலமைச்சரும், அமைச்சர் காமராஜும் தான் அரசியல் செய்கின்றனர். தி.மு.க தலைவரின் தொடர் கேள்விகளால்தான் இந்த அளவிற்காகவாவது அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.

Also Read: நேற்று இரவு பெய்த கனமழையால் சுமார் 50,000க்கும் மேலான நெல் மூட்டைகள் சேதம்.. தஞ்சை விவசாயிகள் வேதனை!!