Tamilnadu

டெண்டர் கேட்டு அதிமுகவினர் ரகளை : தட்டிக்கேட்ட தி.மு.க ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கு பகிரங்க மிரட்டல்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக தி.மு.க-வை சேர்ந்த பழங்குடியினர் பெண் கீர்த்தனா தலைவராக உள்ளார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலராக சந்திரசேகர் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் முடிந்து பழங்குடியினர் பெண் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கீர்த்தனாவிற்கு தரவேண்டிய அரசு மரியாதைகளை மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தோ எதுவும் முறையாக பதிலளிக்காமல் உதாசீனப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில், கூடலூரில் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கீர்த்தனாவுக்கு தெரியாமல் தன்னிச்சையாக அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் அ.தி.மு.க-வை சேர்ந்த அய்யங்கொலி கூட்டுறவு சங்கத் தலைவர் ஆகியோர் உறவினர்கள் பெயரில் ஒப்பந்தத்தை அளித்துள்ளார்.

இதை அறிந்த பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தன்னிச்சையாக அ.தி.மு.க-வினருக்கு அளித்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், தான் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வினர் பழங்குடியினர் பெண் என்பதை கூட பாராமல் அதிகாரிகள் கண் முன்பே தகாத வார்த்தையால் பேசி மிரட்டியதால் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தி.மு.கவை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கீர்த்தனாவை பத்திரமாக அழைத்து வந்தனர். அ.தி.மு.க ஆட்சியில் அரசு அலுவலகத்தில், அதிகாரிகள் கண் முன்பு மண்ணின் மைந்தர்கள் என போற்றப்படும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரை மிரட்டிய சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: அ.தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமை : ஆம்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை !