Tamilnadu
வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம் : கோவையில் ‘டிரான்ஸ் கிச்சன்’ உணவகம் நடத்திவந்த திருநங்கை கொலை!
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி அருகே உள்ள என்.எஸ்.ஆர் சாலை பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை சங்கீதா. திருநங்கை சமூக மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் சங்கீதா பல்வேறு சமூக ஆர்வலர்களிடம் நிதி திரட்டி, கோவையில் ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும், கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் மாவட்ட தலைவரான சங்கீதா, மாவட்டங்களில் உள்ள திருங்கைகளுக்கு பல்வேறு உதவிகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இவரது உணவகத்தில் பணிபுரியும் அனைவரும் திருநங்கைகள் என்பதால் மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திருநங்கை சங்கீதா, உணவகத்திற்குச் செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த உடன் பணி புரியும் திருநங்கைகள் அவரது செல்ஃபோன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட, அவரை நேரில் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது தண்ணீர் நிரப்பி வைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அதில் பார்த்தபோது, அதனுள் அழுகிய நிலையில் திருநங்கை சங்கீதாவின் சடலம் இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர், போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது : ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட பழனிசாமி : கோவை விவகாரத்தில் திமுக IT WING பதிலடி!
-
‘அறிவுத் திருவிழா’ - இளைஞர்களுக்கு திராவிட கொள்கை உரம் ஊட்டும் உதயநிதி : முரசொலி புகழாரம்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!