Tamilnadu

மீண்டும் இந்தி தெரியாதவரை இந்தி பிரிவில் நியமித்த பா.ஜ.க அரசு: தமிழக அதிகாரிகளை வைத்து அதிகார விளையாட்டா?

பா.ஜ.க அரசு இந்தி திணிப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் ஜி.எஸ்.டி உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் பாலமுருகன் இந்தி திணிப்பு குறித்து கடந்த செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்தார்.

இந்தியை தாய் மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் தமிழரான தனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாகவும், விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியை பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பதும் கூட இந்தி திணிப்பே என்றும் குறிப்பிட்டு மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மத்திய பா.ஜ.க அரசின் இத்தகைய இந்தி திணிப்புச் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது இந்தி பிரிவில் இருந்து பாலமுருகன் ஐ.ஆர்.எஸ் மாற்றப்பட்டுள்ளார். அவர் அதே ஜி.எஸ்.டி அலுவலகத்தில் வேறொரு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்தி பிரிவுக்கு பிரிஸி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரான இவருக்கும் இந்தி தெரியாது எனக் கூறப்படுகிறது.

இந்தி தெரியாதவரை இந்தி அலுவல் பிரிவில் நியமித்ததால் புகார் கிளம்பிய நிலையில், அவரை மாற்றிவிட்டு அந்தப் பதவிக்கு வேறொரு இந்தி தெரியாத தமிழரை மீண்டும் நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு - ஜி.எஸ்.டி அலுவலக உதவி ஆணையர் புகார்!