Tamilnadu

நேற்று இரவு பெய்த கனமழையால் சுமார் 50,000க்கும் மேலான நெல் மூட்டைகள் சேதம்.. தஞ்சை விவசாயிகள் வேதனை!!

தஞ்சையில் நேற்று இரவு சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இரவு பெய்த கன மழையால் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் மணிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் அரசு கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது, இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே விவசாயிகளின் கோரிக்கை என்னவென்றால் விடுமுறை இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும், நெல்லின் ஈரப்பதத்தை 22% உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும், மேலும் ஏற்கனவே கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.