Tamilnadu

தமிழக மக்களின் வரிப்பணத்தால் உருவான அண்ணா பல்கலையை கபளீகரம் செய்ய முனைவதா? - காங்கிரஸ் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக் கூடிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்து உயர் கல்வியை மத்திய அரசு கல்வி பட்டியலில் சேர்த்துவிடக் கூடாது என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி.

அதில், “அண்ணா பல்கலைக்கழகம் 1978 இல் தொடங்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் மத்திய பா.ஜ.க அரசு துணைவேந்தர் சூரப்பா மூலம் பல்கலைக்கழகத்தை நேரடியாக மத்திய அரசின் கீழ், கொண்டுவர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றால், பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் சேர்ப்பது, கட்டண முறை போன்ற அனைத்தும் மத்திய அரசிற்கு சென்றுவிடும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது ரூ 2 லட்சமாக உள்ளது. இது கதிதான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் ஏற்படும்.

Anna University

தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லாமல் போய்விடும். மாநில கல்வி பட்டியலில் உள்ள பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்ய பார்க்கிறது. அதற்கு ஆளும் மாநில அரசு துணை போகிறது.

சமூகநீதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது துணைவேந்தரின் செயல். சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் 69 சதவீகித இடஒதுக்கீடும், ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பொறியியல் பட்டதாரி ஆவதை கேள்விக்குறியாக்குகிறது.

மத்திய அரசு கொடுப்பதாக சொன்ன ரூ 1500 கோடியையும், சூரப்பா பல்கலைக்கழகத்திலேயே வசூலித்து தருவோம் என்கிறார். இதனால் பல்கலைக்கழக கல்வி கட்டணம் உயர்ந்து ஏழை, எளிய மாணவர்களின் பொறியியல் கனவு என்பது எட்டாக்கனியாகி விடும்.

Also Read: காவி கும்பலிடம் இருந்து அண்ணா பல்கலையை பாதுக்காத்திடுங்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Dismiss_Surappa

உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து ஆளும் பா.ஜ.க. அரசு முடிவெடுத்திருக்கிறது. இது பல்கலைக்கழகத்தின் தரத்தை குறைக்கும் செயலாகும். மேலும் இதற்கு, பல்கலைக்கழக பேராசிரியர்களும், மாணவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

எப்படி நம் மாணவ செல்வங்களின் மருத்துவ கனவை நீட் தேர்வின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசினர் சிதைத்தார்களோ, அதே போல பொறியியல் கனவும் அழித்தொழிக்க முயற்சி செய்கின்றனர். இதையும் அண்ணாவின் பெயரில் உள்ள அடிமை அ.தி.மு.க. அரசு பதவி சுகத்திற்காக கைகட்டி வேடிக்கை பாக்கிறது.

ஏழை, எளிய மக்களின் உயர் கல்வி கனவு என்பது கல்வி கண் திறந்த காமராஜரின் கனவு. அதை நிறைவேற்றியும் காட்டினார். இதற்கு பங்கம் வந்தால் முதல் குரல் காங்கிரஸின் குரலாகத்தான் இருக்கும். அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை எந்த வகையிலும் மத்திய அரசு கல்வி பட்டியலில் சேர்க்கக் கூடாது. தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தர் சூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி போராட்டம் அறிவிப்பு!