Tamilnadu

“நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா?” - சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு அபராதம் விதித்து அதிரடி உத்தரவு!

சுகாதார அலுவலர் நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக பொது சுகாதாரத்துறையின் முந்தைய மற்றும் தற்போதைய இயக்குநர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 33 மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் 2014-ல் அறிவிப்பு வெளியிட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த டாக்டர் தினேஷ்குமார் விண்ணப்பித்தார். அவரது பெயர் எம்.பி.சி/டி.சி பிரிவு காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

அதே பிரிவில் பணி நியமனம் பெற்ற டாக்டர் வினோத் என்பவர் பணியிலிருந்து ராஜினாமா செய்ததால் அந்த காலியிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள தன்னை நியமிக்கக்கோரி தினேஷ்குமார் மனு அளித்தார். ஆனால் அந்த காலியிடத்தை டி.என்.பி.எஸ்.சியிடம் ஒப்படைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி தினேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ளது. ஆனால் தற்போது காத்திருப்போர் பட்டியலில் மனுதாரர் பெயர் இடம்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வழக்கு விசாரணையில் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விதமான தகவலை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்தபோது மனுதாரரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதும், அது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி மனுதாரருக்கு தகவல் தெரிவித்ததும் உறுதியாகியுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை என்பதையே காட்டுகிறது. நீதிமன்றத்திற்கு தவறான பல தகவல்களை அளிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தான் அரசின் உயர் பதவிகளில் உள்ளனர்.

நியமனம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதியது தொடர்பான பொது சுகாதாரத்துறை இயக்குநரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சுகாதாரத்துறையிடம் டி.என்.பி.எஸ்.சி 4 வாரத்தில் காத்திருப்போர் பட்டியலை வழங்கவேண்டும். அதன் பின்னர் மனுதாரரை 2 வாரத்தில் காலியிடத்தில் நியமிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக இணைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு விசாரித்து, பொது சுகாதாரம் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த துறையின் தற்போதைய இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம், முந்தைய இயக்குனர் கே.குழந்தைசாமி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை கொரோனா நிவாரணத்துக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் 2 வாரங்களில் வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.