Tamilnadu

செமஸ்டர் கட்டணம் செலுத்த அக்.29 வரை கால அவகாசம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

பொறியியல் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் அனைத்துப் படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பேரிடர் காலத்தில் பொருத்தமில்லாத இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று கெடுவை நீட்டிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, செமஸ்டர் கட்டணம் செலுத்த கால அவகாசம் செப்டம்பர் 19-ம் தேதி வரை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம், கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை அவகாசம் அளித்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Also Read: “அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பமின்றி இறுதி செமஸ்டர் தேர்வு எழுத ஏற்பாடு செய்க”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!