Tamilnadu

“இந்தி தெரியாதா? அப்போ பணம் கிடையாது” - சென்னை BOI மேலாளர் சர்ச்சை பேச்சு! #StopHindiImposition

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், கலைஞர் கருணாநிதி சாலை பகுதியை சேர்ந்தவர் கரு அண்ணாமலை. இவர் கே.கே நகர் பகுதியில் கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

வியாபார தேவைக்காக பாங்க் ஆப் இந்தியாவின் கே.கே நகர் கிளையில் பல ஆண்டுகளாக வங்கிக் கணக்கை வைத்துள்ளார். இந்நிலையில், பணம் எடுப்பதற்காக தனது மகனுடன் அந்த வங்கிக்குச் சென்றுள்ளார்.

அப்போது வங்கி மேலாளரான சுதன் என்பவரிடம் பணம் எடுப்பதற்கான காசோலைகளை வழங்கி உள்ளார். அதற்கு அந்த வங்கி மேலாளர் வங்கியில் தற்போது பணம் இல்லை என்று கூறியும் மாறாக இந்தி தெரிந்தால் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை வங்கி மேலாளரிடம் ‘தமிழ் தெரியாமல் எப்படி தமிழகத்தில் பணியாற்றுவீர்கள்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் வங்கி மேலாளர் இந்தி தெரிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று சக அலுவலரிடம் தெரிவித்ததாகவும் கரு அண்ணாமலை கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்தி தெரியாத வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த சேவையும் வங்கி சார்பில் செய்யாமல் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வங்கி கடன்கள் வழங்கப்படுவதாகவும், தமிழ் பேசுபவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கரு அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்

Also Read: இந்தி மொழியில் பேனர் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி!