Tamilnadu
“பொதுமக்களின் சேவகராகத் திகழ்ந்த முன்னணிச் செயல்வீரர் ஜி.பி.வெங்கிடு” : மு.க.ஸ்டாலின் இரங்கல் பதிவு!
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொழிப் போர்த் தியாகியுமான திரு. ஜி.பி. வெங்கிடு மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொழிப் போர்த் தியாகியுமான திரு. ஜி.பி. வெங்கிடு அவர்கள், தனது 86-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு கழகத்தின் சார்பில், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு வடக்கு மாவட்டம் - கோபி ஒன்றியக் கழகத்தின் மூத்த முன்னோடியும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் அமோக வெற்றி பெற்று, பொதுமக்களின் குறை தீர்க்கும் நண்பனாக - தொகுதி மக்களின் நல்லதொரு குடும்ப உறுப்பினராகத் திகழ்ந்தவர், ஜி.பி.வெங்கிடு அவர்கள்!
கோபி நகரத்தில் வார்டு கழகச் செயலாளர், நகர் மன்ற உறுப்பினர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர், மாநில விவசாய அணி துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து - கழகப் பணியாற்றியவர். முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லி - அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து - அனைவரின் அன்பையும் பெற்றவர்.
ஆழமான அன்னைத் தமிழ் மொழியுணர்வு படைத்த அவர் - கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்று கழக வளர்ச்சிக்காக அப்பகுதியில் ஒரு செயல்வீரராகப் பாடுபட்டவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளால் கவரப்பட்டு - முத்தமிறிஞர் கலைஞர் அவர்கள் மீது தனிப் பற்றும் பாசமும் வைத்திருந்தவர். என் மீது மாறாத அன்பு வைத்திருந்தவர்...!
பொதுமக்களின் சேவகராகத் திகழ்ந்த - கழகத்தின் முன்னணிச் செயல்வீரர்களில் ஒருவரான திரு. ஜி.பி.வெங்கிடு அவர்களின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் மனைவி திரிபுராம்பாள் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!